உங்கள் குழந்தையும் சமூகத்தில் ஆளுமை மிக்க நபராக வளர வேண்டுமா? இதையெல்லாம் கட்டாயம் பின்பற்றுங்கள்

உங்கள் குழந்தைகள் உங்கள் கைகளில்.

உங்கள் குழந்தையும் சமூகத்தில் ஆளுமை மிக்க நபராக வளர வேண்டுமா? இதையெல்லாம் கட்டாயம் பின்பற்றுங்கள்

மண்ணில் பிறக்கும் மானிடர்கள் ஒவ்வொருவரும் ஒரு நாள் அன்னை மடியில் தவழ்ந்தவர்களே.  அமுதுாட்டி சீராட்டி வளர்க்கும் உங்கள் அன்புச் செல்வங்கள் இந்த உலகில் உன்னதமானவர்களாக மாற வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரினதும் எதிர்பார்ப்பு எனின் அதில் இரு வேறு கருத்துக்கள் கிடையாது.  ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து ஆளாகும் வரை அக்குழந்தையின் சகல அம்சங்களும் தங்கி இருப்பது பெற்றோரின் கைகளிலேயே ஆகும். அதாவது குழந்தையின் ஒவ்வொரு அசைவும் தாயினும் தந்தையினதும் வார்த்தெடுப்பாகும். எனினும் துரதிஷ்டவசமாக இன்று அதிகமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு வளர்ப்பது என்று தெரியாமல் சிரமப்பட்டு கொண்டு இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக இன்றைய நவீன உலகில் பெற்றோர்களை விஞ்சும் பிஞ்சுகளாக உருவெடுத்து இருக்கும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு எவ்வாறு வழிகாட்டுவது என்பது தொடர்பில் பெற்றோர்கள் எந்த அறிவும் இன்றி இருப்பது மிகவும் கவலைக்குரியது. பொதுவாக இன்றைய பெற்றோர்களை எடுத்துக் கொண்டால் தாங்கள் எப்படி வளர்க்கப்பட்டோமோ அதே வழி முறையில் அவர்கள் பிள்ளைகளையும் வளர்க்க முற்படுவர். எனினும் இன்றைய தலைமுறையை இவ்வாறு அணுகுவதால் பெற்றோர்கள் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என்பது நிச்சயம். எனவே எமது குழந்தை செல்வங்கள் நாளைய உலகிற்கு நற்பயன் அளிக்கும் பிரஜைகளாக மாற வேண்டுமாயின் இன்றைய பெற்றோர்கள் தமது குழந்தை வளர்ப்பு கலையிலும் ஒரு சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பது உறுதி.  

நம்பிக்கை வர செய்யுங்கள்

நவீன சிறார்களை பொறுத்தவரை பெற்றோர்கள் மிக அடிப்படையாகச் செய்ய வேண்டிய ஒரு விடயம் அவர்களிடம் அவர்களைப் பற்றிய நம்பிக்கையை வர வைப்பது ஆகும். அதாவது ஒரு குழந்தை முதலில் , தான் யார், தனது திறமைகள் என்ன,அத் திறமைகளை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம் என்பதை அறிய வேண்டும். இதற்கு பெற்றோர்களின் வழிகாட்டல் மிகவும் அவசியம். காரணம் இன்று அனைத்து பாடசாலைகளிலும் பொதுவாக பரீட்சை மையக் கல்வியே காணப்படுகின்றது. எனவே பெற்றோர்களும் தமது பிள்ளைகளை அளவிடும் அளவுகோலாக பரீட்சை புள்ளிகளையே வைத்துக் கொண்டு அதன் பின்னால் கண்மூடித்தனமாக பிள்ளைகளை வழி நடத்திக் கொண்டிருக்கின்றனர். எனினும் இது இயற்கை விதிக்கு முரணானது. ஒரு சில பிள்ளைகளே இப்ப ரீட்சைகளில் வெற்றிகரமாக சித்தி அடைவார். சித்தி அடையாத பெரும்பாலான பிள்ளைகள் "தாம் தோல்வி அடைந்தவர்கள்" என்ற ஒரு விம்பத்தை தமக்குத் தாமே உருவாக்கிக் கொண்டு தான் யார் தமது திறமைகள் என்ன என்பதை அறியாமலேயே வாழ்க்கை பயணத்தை ஒட்டிக் கொண்டிருப்பர். இந்நிலையை மாற்ற பெற்றோரின் ஆதரவுக் கரம் பிள்ளைகளுக்கு மிகவும் அவசியம். இது பன்முக அறிவு எனப்படும்.ஹாே வாட் கார்டின்னர் என்பவரால் முன்வைக்கப்பட்ட ஒரு கோட்பாடே இப் பன்முக அறிவுக் கோட்பாடு ஆகும். இக்கோட்பாட்டின்படி அறிவு என்பது எட்டு வகையாக காணப்படும். அவையாவன உடல் அறிவு, சக மனித உறவு சார்ந்த அறிவு, தற்கால அறிவு, மொழி அறிவு, காட்சி அறிவு, இசை அறிவு,சுயம் சார்ந்த அறிவு, இயற்கை காட்சிகள் சார்ந்த அறிவு ஆகும் இவரின் கூற்றுப்படி எல்லா குழந்தைகளிடமும் இந்த எட்டு அறிவுகளும் காணப்படும். எனினும் வெவ்வேறு அளவுகளிலேய இருக்கும். எனவே ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு எந்த அறிவு அதிகமாக இருக்குமோ அத்திறமையை இனம் கண்டு அதனை வளர்த்து விட முயலும் போது அக்குழந்தையின் உள்ளத்தில் உலகைப் பற்றிய புதிய ஒரு நம்பிக்கை பிறப்பதுடன் அத்துறையில் முன்னேறி சாதனை படைக்க வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் ஏற்படும். அதேபோல் இன்றைய இளம் தலைமுறையை நல்வழிப்படுத்த பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டிய மற்றொரு விடயம் உறவுகளின் உன்னதத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதாகும். அதாவது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சமூகத்தின் பிற நபர்கள் ஆகியோருடன் உணர்வு பூர்வமான உறவை உருவாக்கிக் கொள்ள கற்றுக் கொடுக்க வேண்டும். காரணம் வாழ்க்கை என்பது  உறவுகளால் அடித்தளத்தில் இடப்பட்ட ஒரு அழகிய விடயம். அதனை குழந்தைகள் உணர்வுபூர்வமாய் அனுபவிக்க உறவுகளின் உன்னதத்தை அவர்கள் உணர்வது இன்றியமையாதது.

பாதுகாப்பை உணர செய்யுங்கள்

 குழந்தை வளர்ப்பில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டிய இன்னொரு பகுதி குழந்தைகளுடன் கூடவே இருத்தல் ஆகும். பெற்றோர் உடன் இருக்கும் போதே குழந்தைகளின் உடம்பில் சில ஹோமானே்கள் சுரக்கும். அது அவர்களுக்கு ஒரு வித பாதுகாப்பு உணர்வை வழங்கும். இதனூடாக அவர்களின் உள்ளத்தில் சந்தோஷமும் இதமான உணர்வும் ஏற்படும். எப்போதும் நல்ல மனநிலையில் இருக்கும் குழந்தைகளே சிறந்த சாதனைகளை நிலை நாட்டுவர். இன்றைய இயந்திர உலகில் தந்தை மட்டுமன்றி தாயும் பணம் சம்பாதிக்கும் நோக்கில் வேலை வேலை என்று வேலை உலகில் நாளையும் பொழுதையும் கழிப்பதால் பிள்ளைகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தாத்தா, பாட்டி அல்லது வீட்டுப் பணியாளர்கள் என்போருடனே தனது நேரத்தை கழிக்கின்றனர். இவர்களிடம் பெரும்பாலும் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வைத் தவிர அவர்களுடன் ஒட்டி உறவாடி அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து அதற்கேற்ற விதத்தில் அவர்களை வழிநடத்து மாட்டார்கள். பெற்றோருடன் வலுவான பிணைப்பு இல்லாத பிள்ளைகள் பாதுகாப்பு உணர்வு அற்றவர்களாக உணர்வர்.எனவே குழந்தைகளுக்கு எப்போதும் மிகச்சிறந்த வழியில் அன்பை வெளிப்படுத்தக் கூடியவர்களாக பெற்றோர்கள் இருக்க வேண்டும். எத்தனை வேலைப் பளுவிற்கு மத்தியிலும் குழந்தைகளுடன் கழிப்பதற்கு என தனியான ஒரு நேரத்தை ஒதுக்கி கொள்ள வேண்டும்.  குழந்தைகளின் பேச்சுக்கு செவி சாய்த்து அவர்களின் உள்ளத்து உணர்வுகளையும் ஆழமான ஆர்வங்களையும் புரிந்து அதற்கேற்ற விதத்தில் அவர்களின் உலகை அமைத்து கொடுக்க வேண்டும். அப்போதுதான் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு வலுவான பிணைப்பு ஏற்பட்டு பெற்றோரின் இறுதி காலத்தில் அவர்களிடம் சிறந்த தொடர்பை பேணக்கூடிய பிள்ளைகள் உருவாகுவர்.

உங்கள் குழந்தையை அவமானப்படுத்தும் செயல்களை செய்யாதீர்கள்

 குழந்தைகள் விடயத்தில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டிய பிரிதொரு பக்கம் குழந்தைகளின் தவறுகளை கையாளும் விதம் ஆகும். அதாவது தவறு செய்யாத குழந்தைகள் என்று யாரும் கிடையாது. குழந்தைகள் செய்வதெல்லாம் அவர்கள் ஏதோ ஒரு விடயத்தை கற்றுக் கொள்ளவே ஆகும் அது தவறாக நடக்கும் பட்சத்தில் அதனை சுட்டிக்காட்டி அச்செயலை மீண்டும் செய்யாது இருப்பதை உறுதி செய்வது பெற்றோரின் கடமை ஆகும். மாறாக குழந்தைகள் தவறு செய்யும் போது உடனடியாக திட்டவோ அடிக்கவோ கூடாது. அவர்களுடைய உலகம் ஒன்றை ஆராயும் போது அதற்கு தடை போடக்கூடாது. குறிப்பாக குறும்பு செய்யும் பிள்ளைகளை வீணாக திட்டிக் கொண்டும் அவர்களின் செயல்களுக்கு தடை போட்டுக் கொண்டும் இருக்கக் கூடாது. அச்செயல்களில் ஏதாவது ஆபத்து இருந்தால் அதனை அமைதியான முறையில் எடுத்துக்காட்ட வேண்டும். அதேபோல் பிள்ளைகளை பிறரின் முன்னிலையில் பகிரங்கமாக திட்டக்கூடாது. அவ்வாறு திட்டும்போது அவர்கள் தமது சுயமரியாதையை இழந்தது போன்ற உணர்வைப் பெறுவர். பெற்றோர் இத்தவறை தொடர்ந்து செய்யும்போது ஒரு கட்டத்தில் குழந்தைகள் பெற்றோரை வெறுப்பவர்களாக மாறுவார்கள். எனவே பெற்றோர்கள் தவறு செய்யும் பிள்ளைகளை மிக மிக கவனமாக கையாள்வது அவசியம். 

கலை ஆர்வத்தை தூண்டுதல்

அதேபோல் இன்றைய இளம் சிறார்கள் மத்தியில் வளர்க்கப்பட வேண்டிய பிரிதொரு முக்கிய அம்சம் படைப்பூக்கமாகும். குழந்தைகளுக்கு சிறு வயது முதலே மனதில் படைப்பூக்கத்தை விதைத்தால்தான் வளர்ந்த பின் அவர்கள் புதிய விடயங்களை செய்வதற்கான ஆற்றலையும் அறிவையும் விருத்தி செய்து கொள்வர். மதிப்பு மிகுந்த யோசனைகளை சுயமாக சிந்தித்து உருவாக்கும் செயல்முறையே படைப்பூக்கம் என்பது பிரிட்டிஷ் கல்வியியலாளர்  ரபின்சன் என்பவரின் கருத்து ஆகும். குழந்தைகளிடம் இப்படைப்பூக்கத்தை அதிகரிப்பதில் பெற்றோரின் பங்கு அளப்பரியது. குழந்தைகளுக்கு மிகவும் ஆர்வமான துறையை இனம் கண்டு அத்துறையில் படைப்பூக்கத்தை அதிகரிக்கும் போது இயல்பாகவே அவர்கள் சாதனையாளர்களாக மாறுவார். 

குழந்தைகளிடம் வளர்க்கப்பட வேண்டிய பிரிதொரு முக்கிய அம்சம் உயர்நிலை சிந்தனை திறன் ஆகும். அதாவது குழந்தைகளிடம் இயல்பாவே காணப்படும் கேள்வி கேட்கும் திறனை மேலும் வளர்த்து விடுவதை இது குறிக்கும்.கேள்விகள் தான் கற்றலுக்கான மிகவும் அபாரமான கருவி ஆகும். அதேபோல் பெற்றோரும் தம் பங்கிற்கு குழந்தைகளின் மூளையே விருத்தி செய்யக்கூடிய அவர்களின் பன்முக ஆளுமையை விருத்தி செய்யக்கூடிய கேள்விகளை கேட்டு அவர்களின் சிந்தனை திறனை தூண்ட வேண்டும். வெறுமனே தேர்வை மையப்படுத்திய கேள்விகளை மாத்திரம் கேட்காமல் பிள்ளைகளின் உள, மனவெழுச்சி சார் விடயங்களை தூண்டக்கூடிய வினாக்களை தொடுத்து அவர்களை வித்தியாசமான கோணத்தில் சிந்திக்க வழிப்படுத்த வேண்டும். எனினும் துரதிஷ்டவசமாக இன்றைய பெற்றோர் செய்யும் மாபெரும் தவறு குழந்தைகள் கேட்கும் சாதாரண கேள்விகளுக்கு கூட ஏனோ தானோ என்ற பதில்களை கூறி அத்துடன் அவர்களின் சிந்தனை ஆற்றலையே முடக்கி விடுகின்றனர். இது தவறான ஒரு வழிமுறை ஆகும். மாறாக பெற்றோர் எப்போதும் பிள்ளைகளின் உயர்நிலை சிந்தனைக்கு தடை போடக்கூடாது. 

இலக்குகளை நிர்ணயிக்கும் திறனை வளர்த்தல்

அதேபோல் வினைத்திறனும் விளை திறனும் கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கு குழந்தைகளிடம் இடப்பட வேண்டிய பிரிதொரு அடித்தளம் இலக்குகளை நிர்ணயிக்கும் திறனை வளர்த்தல் ஆகும். அதாவது தனது வாழ்விற்கு அர்த்தம் கொடுப்பதற்காக ஒருவர் உருவாக்கிக் கொள்ளும் நோக்கங்களே இலக்குகள் ஆகும். பெரியவர்களைப் போலவே குழந்தைகளுக்கும் இலக்குகள் அவசியம். அப்போதுதான் குழந்தை பருவத்தில் இருந்தே ஒருமுகப்பட்ட சிந்தனையுடன் செயல்பட பழகுவர். இலக்குகள் என்னும் போது ஆரம்பத்தில் பாரிய இலக்குகளை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. அவர்களால் இயன்ற சிறு சிறு இலக்குகளையே முதலில் கொடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக 

நான் இந்த வாரத்திற்குள் ஐந்து பக்கங்கள் வாசிப்பேன், நான் இம்மாதத்திற்குள் இரண்டு மரங்களை நடுவேன் என்றவாறு சிறு சிறு இலக்குகளை வகுத்து அதனை அடைவதற்கான விதிமுறைகளை வகுத்து அதனை அடைய முயற்சி செய்ய வைக்க வேண்டியது பெற்றோரின் மாபெரும் பொறுப்பாகும். இதனை ஊக்கப்படுத்த பெற்றோர் சிறு சிறு வெகுமதிகளையும் பிள்ளைகளுக்கு வழங்கலாம். வெகுமதிகள் வழங்குவதன் ஊடாக பிள்ளைகள் தமது இலக்கை நோக்கி செயல்படுவதில் மேலும் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்வர். இதனை பெற்றோர் சரிவர திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும் போது பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தமக்கான இலக்குகளை தாமே வகுத்துக் கொண்டு செயல்பட ஆரம்பிப்பர். 

நன்றாக விளையாட விடுங்கள்

இன்றைய நவீன உலகில் குழந்தைகளிடம் வளர்க்கப்பட வேண்டிய பிரிதொரு அம்சம் விளையாட்டுக்கான நேரம் ஒதுக்குதல் ஆகும்.  இன்றைய நவீன பெற்றோர்களும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விடயமாக இன்று விளையாட்டு மாறிப் போய் உள்ளது.காரணம் இன்று அதிகமான பிள்ளைகள் இலத்திரனியல் திரைகளுக்கு அடிமையாகி உள்ளனர். தொலைக்காட்சியும் தொலை பேசியும் மாறி மாறி குழந்தைகளின் உலகில் சுழன்று கொண்டிருக்கின்றன. பெற்றோர்களும் கூட்டு குடும்பம் என்ற நிலையில் இருந்து விடுபட்டு இன்று ஒவ்வொரு குடும்பமும் தனித்தீவாக மாறி உள்ளது. இந்நிலையில் பிள்ளைகள் விளையாட்டு என்பதை மறந்த நிலையில் உள்ளனர். இது ஒரு ஆரோக்கியமான நிலை அன்று. அதுமட்டுமன்றி மேலும் சில பெற்றோர்கள் குழந்தைகளின் உலகில் வெறுமனே படிப்பை மாத்திரம் நுழைத்து பாடசாலை கல்விக்கு மேலதிகமாக டியூஷன் கலாச்சாரத்தையும் உண்டு பண்ணி காலை எழுந்தது முதல்  தூங்கச் செல்லும் வரை படிப்பிலேயே அவர்களின் நேரத்தை கழிக்க நிர்பந்திக்கின்றனர். இதுவும் ஆரோக்கியமான நிலை அல்ல. மாறாக குழந்தைகள் நிறைய விளையாட வேண்டும் என்பதே இயற்கை விதி. பிள்ளைகள் தம் சக தோழர்களுடன் இணைந்து விளையாடும் போது அவர்களின் உடல் உள தகைமைகள் விருத்தி பெறுவதுடன் சிறந்த ஆளிடைத் தொடர்பும் வளர்ச்சி அடைகிறது. இதனால் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளல், மனவளர்ச்சி கட்டுப்பாடு போன்ற உயர்திறன்களை பிள்ளைகள் கற்றுக் கொள்கின்றனர். பிள்ளைகளுக்கு தாராளமாக விளையாடுவதற்கு நேரம் ஒதுக்கி கொடுக்க வேண்டும் .

இவ்வாறு குழந்தைகள் விடயத்தில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் ஏராளமாக உள்ளன. ஒவ்வொரு பெற்றோரும் இவற்றை சரிவர அறிந்து பொருத்தமான முறையில் எமது பிள்ளைகளை கையாளும் போது தான் சிறந்த ஒரு எதிர்காலத்தை அவர்களுக்கு அமைத்துக் கொடுக்க முடியும் என்பது நிச்சயம்.  எனவே எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் எமது கைகளிலேயே என்பதை உணர்ந்து அதற்காக இன்றே திட்டமிடுவோம்.