உடனடி தமிழ் செய்திகள் (நேரலை) 2022-03-16 Wednesday - Live News Updates AK Tamil

இலங்கையில் இடம்பெறும் முக்கிய செய்திகள் உடனுக்குடன் நேரடியாக.

1. உலக சந்தையில் தங்கம் விலை வீழ்ச்சி- இலங்கையில் அதிகரிப்பு

உலக சந்தையில் தங்கம் விலை வீழ்ச்சி- இலங்கையில் அதிகரிப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், டொலருக்கு நிகரான இலங்கையின் ரூபாவின் வீழ்ச்சி காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதென அகில இலங்கை நகை கடை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, செட்டியார் தெருவில் 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை, 150, 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

அதேநேரம், 22 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை, 141, 625 ரூபாவாக காணப்படுகிறதென அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

2. வானிலையில் மாற்றம்! வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பு

வானிலையில் மாற்றம்! வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பு

சப்ரகமுவ, மேல், தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாககொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

3. கட்டண அதிகரிப்பு போதாது: சேவையை தொடர்வதா என்பதை மூன்று தினங்களில் அறிவிப்போம்! அகில இலங்கை பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவிப்பு

கட்டண அதிகரிப்பு போதாது: சேவையை தொடர்வதா என்பதை மூன்று தினங்களில் அறிவிப்போம்! அகில இலங்கை பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவிப்பு

தற்போது அதிகரித்திருக்கும் பஸ் கட்டணம் போதுமானதல்ல. அதனால் மூன்று தினங்களுக்கு பஸ் சேவையில் ஈடுபட்டு, அதனால் ஏற்படும் நட்டத்தை சுமக்க முடியாதுபோனால் எமது தீர்மானத்தை எதிர்வரும் 3 தினங்களில் அரசாங்கத்துக்கு அறிவிப்போம் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் செயலாளர் அன்ஜன பிரயன்ஜித் தெரிவித்தார்.

தற்போது அதிகரிக்கப்பட்டிருக்கும் பஸ் கட்டணம் தொடர்பாக தனது சங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை அடிப்படையாக்கொண்டு பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது . தற்போது அதிகரிக்கப்பட்டிருக்கும் கட்டணம் மூலம் நாங்கள் நாளாந்தம் எரிபொருளுக்காக செலவிடும் தொகையை கூட பெற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு பயணிகள் போக்குவரத்து சேவையை தொடர முடியாது. இதனால் பஸ் சேவையை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை நிறுத்த முடியாது. பஸ் உரிமையாளர்களுக்கு கீழ் பணி புரியும் ஊழியர்கள் இருவருக்கும் சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.

4. உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவு, இலங்கையில் விலை குறைவு ஏற்படுமா?

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவு, இலங்கையில் விலை குறைவு ஏற்படுமா?

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று மேலும் குறைவடைந்துள்ளது.

இதன்படி, பிரேண்ட் சந்தை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தற்போது 98 அமெரிக்க டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று நேற்றைய தினம் 100 டொலராக காணப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.   

இதனிடையே, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை கணிசமான அளவு குறைவடைந்துள்ள நிலையில், அதன் பயனை நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென  ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
 
ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம்  ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 140 அமெரிக்க டொலராக அதிகரித்த நிலையில், குறித்த தினத்திற்கு 35 நாட்களுக்கு முன்னதாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட எரிபொருள் இருப்பையும் சேர்த்து அரசாங்கம் விலை  அதிகரிப்பை மேற்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, சர்வதேச சந்தை நிலைமைக்கு ஏற்ப எரிபொருளின் விலையினை அதிகரித்த  அரசாங்கம், தற்போது  மக்களுக்கு நிவாரணத்தினை வழங்க வேண்டுமெனவும்  அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், நாட்டு மக்களுக்கு இன்று இரவு உரையாற்றவுள்ள ஜனாதிபதி எரிபொருளுக்கான விலையினை குறைப்பதற்கான உத்தரவை பிறப்பிப்பாரானால் பொருத்தமானதாக இருக்குமெனவும் ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம்  ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித  மேலும் தெரிவித்துள்ளார்.