உடனடி தமிழ் செய்திகள் (நேரலை) 2022-02-23 புதன் - Live News Updates AK Tamil

இலங்கையில் இடம்பெறும் முக்கிய செய்திகள் உடனுக்குடன் நேரடியாக.

1. எரிபொருளை தடையின்றி விநியோகிக்க முடிவு

எரிபொருளை தடையின்றி விநியோகிக்க முடிவு

தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஆலோசனை வழங்கியுள்ளார்.

எரிபொருள் தட்டுபாடு தொடர்பில் நேற்று (22) நடைபெற்ற விசேட அமைச்சரவை சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

அத்துடன், எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து நேற்றைய விசேட அமைச்சரவை சந்திப்பில் எவ்வித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார்.

இதேவேளே, இலங்கை மின்சார சபையினால், பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை அரசாங்கம் பொறுப்பேற்கவும் இந்த விசேட அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பெற்றோலிய பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நேற்று விசேட அமைச்சரவை சந்திப்பொன்று நடத்தப்பட்டது.

பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு, மின்சார சபை செலுத்த வேண்டிய கடனை, அரசாங்கம் செலுத்துவதற்கு இணக்கம் எட்டப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.

2. இன்றைய வானிலை விபரம்

இன்றைய வானிலை விபரம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அபாயத்தைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

3. இரு நாட்களில் டீசல் வழங்காவிடின் சேவை நிறுத்தம் செய்ய தயார்- தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

இரு நாட்களில் டீசல் வழங்காவிடின் சேவை நிறுத்தம் செய்ய தயார்- தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில், எதிர்வரும் இரு தினங்களுக்குள் டீசல் வழங்கப்படாவிட்டால் எந்தவொரு தனியார் பஸ்ஸும் சேவையில் ஈடுபடுத்தப்படமாட்டாது என்று அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியந்தஜித் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் , பஸ்களில் 160 – 200 லீற்றர் டீசல் களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும். இது இரு தினங்களுக்கு மாத்திரமே போதுமானதாகும்.

எனவே டீசல் விநியோகத்தின்போது தனியார் பஸ்களுக்கு முன்னுரிமையளிக்குமாறு அரசாங்கத்திடம் கோருகிறோம். மோட்டார் சைக்கிள்கள் , கார் உள்ளிட்ட தனியார் வாகனங்களைத் தவிர்த்து பொது போக்குவரத்துக்களில் பயணிப்பதை ஊக்குவிக்குமாறு அரசாங்கத்திடம் கோருகிறோம் என்றார்.