மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்பு
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்கிறார். 34 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவி ஏற்கிறது.

சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார்.
தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அப்போது ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். அத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதைத்தொடர்ந்து முதலமைச்சரான மு.க.ஸ்டாலினை அறிவித்ததுடன் பதவி ஏற்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
Picture of the day
இதைத்தொடர்ந்து இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெறுகிறது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்கின்றனர். கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையிலேயே பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற இருக்கிறது.
தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்பட சுமார் 160 பேர்கள் மட்டும் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சராக பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு பதவி பிரமாணத்தையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்து வைக்கிறார்.
மேலும் செய்திகள்