இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டி தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டி தொடர் இன்று ஆரம்பம்

அதன்படி இப் போட்டியானது பிற்பகல் 1.00 மணிக்கு டாக்காவில் ‍அமைந்துள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.இலங்கை தங்கள் அணியில் சில மாற்றங்களைச் செய்துள்ளது, குசல் பெரேரா ஒருநாள் போட்டிகளின்  தலைவராக அணியை வழிநடத்துவார். குசல் மெண்டிஸ் திரும்ப அழைக்கப்பட்டு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.சிரேஷ்ட வீரர்களான திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமல் ஆகியோர் அணியில் இருந்து விடுபட்டுள்ளதுடன், ஓரிரு புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷைப் பொறுத்தவரை, சகலதுறை ஆட்டக்காரனான ஷாகிப் அல் ஹசன் திரும்பி அழைக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அல் அமீன் ஹொசைன், ஹசன் மஹ்மூத், ரூபல் ஹொசைன் மற்றும் நாசும் அகமட் ஆகியோரும் இந்த அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.இலங்கை இறுதியாக 2019 ல் ஒருநாள் தொடரில் பங்களாதேஷை எதிர்கொண்டது. அந்த தொடரை 3-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது. 

இரு நாடுகளுக்கிடையில் இதுவரை நடைபெற்ற 48 ஒருநாள் போட்டிகளில் 39 போட்டிகளில் இலங்கை வென்றுள்ளது, பங்களாதேஷ் வெறும் ஏழு போட்டிகளில் வென்றுள்ளது. 

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டிகளின் வரலாற்றில் இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரை பங்களாதேஷ் வென்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.